ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுயாதீன எதிர்க்கட்சி அணியாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் துலிப் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதேவேளை கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் நடைபெற்று வருவதுடன் அதற்கு ஆதரவு தெரிவித்து துலிப் விஜேசேகரவும் இணைந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இதன் போது துலிப் விஜேசேகர கூட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டார்.
அரசியலமைப்பு சபை விவாதம் என்பதால் இந்த விவாதம் நடைபெறும் மூன்று நாட்களும் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட மாட்டாது என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் “நாடாளுமன்ற அவையில் செங்கோல் இல்லாத நேரத்தில் இப்படியான நடவடிக்கையை மேற்கொள்தில் எந்த பயனும் இல்லை” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பிரதியமைச்சர் பதவியை வழங்கியதாகவும் அந்த பதவியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக துலிப் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை குறித்து அதிருப்தி வெளியிட்டதாகவும் இதனால், தன்னை பிரதியமைச்சு பதவியில் இருந்து நீக்கியதாகவும் தெரிவித்துள்ள விஜேசேகர, தனது பெற்றோருக்கு அடுத்து தான் நேசிப்பது நாட்டை எனவும் கூறியுள்ளார்.
இன்றைய தினம் மிகவும் தீர்மானகரமானது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை பௌத்த சங்கத்தினர் எதிர்த்து வரும் நிலையில், அரசியலமைப்புச் சபைக் கூடி நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஆரம்பித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கைகோர்த்து பியகம தொகுதியில் சேவையாற்ற எண்ணியுள்ளதாகவும் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார பிரதியமைச்சர் பதவியில் இருந்து துலிப் விஜேசேகரவை நீக்கியதாக ஜனாதிபதி செயலகம் நேற்று இரவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.