• Sat. Oct 11th, 2025

முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோகமான இறுதி காலம்

Byadmin

Nov 13, 2017
பகதூர் ஷா ஜாஃபர் II

முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோகமான இறுதி காலம்

பகதூர் ஷா ஜாஃபர் கைது செய்யப்பட்டதை விவரிக்கும் ஓவியம்

 

கடைசி முகலாய பேரரசர் குறித்த நினைவுகள், கால ஓட்டத்தில் அனைவரது மனங்களிலிருந்தும் மறைந்துவிட்டது. அனைவரும் அவரை மறந்து போய் இருந்தனர். ஆனால், இப்போது மீண்டும் அவரது நினைவுகள் உயிர்த்தெழுந்து இருக்கிறது. அவரது நினைவுகளை மட்டுமல்ல, அவரது பாரம்பரியத்தை நினைவுக் கூற தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு காரணம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அவரது கல்லறை.

கடைசி முகலாய பேரரசராக இருந்த பகதூர் ஷா ஜாஃபர் II ஒரு அரசராக மட்டும் இருக்கவில்லை. அவர் சூஃபி ஞானி, ஒரு சிறந்த உருது கவிஞர்.

ரங்கூனில் (யாங்கூன்) 1862-ம் ஆண்டு, சிதிலமடைந்த ஒரு மரவீட்டில், பகதூர் ஷா ஜாஃபர் தனது கடைசி மூச்சை சுவாசித்த போது, அவரை சுற்றி அவரது நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே இருந்தனர்.

பகதூர் ஷாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ்காரரர்கள், அவர் இறந்த பிறகு, அவரது பிரேதத்தை புகழ் பெற்ற ஷ்வைடகன் பகோடா என்னும் இடத்தின் அருகே உள்ள அடையாளம் குறிக்கப்படாத ஒரு இடத்தில் புதைத்தனர்.

தோல்வி, மனசோர்வு, அவமானம். இப்படிதான் இந்தியா, பாகிஸ்தன், வங்கதேசம், ஆஃப்கனின் சில பகுதிகளை முந்நூறு ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒரு பேரரச வம்சாவழியின் கடைசி அரசனின் முடிவு அவமானகரமானதாக இருந்தது.

தோல்வி கண்ட இந்திய எழுச்சி:

இவருடைய ஆட்சியை இவரின் முன்னோர்களான அக்பர், அவுரங்கசிப் போன்ற ஒப்பற்ற அரசர்களின் ஆட்சியுடன் ஒப்பிடமுடியாது என்றாலும், 1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியன் கம்பெனிக்கு எதிராக போராடி தோல்வி கண்ட முதல் இந்திய எழுச்சியின் தொடக்கப்புள்ளி ஜாஃபர்தான். இந்திய எழுச்சி என்று வர்ணிக்கப்படும் அந்த பெரும் போராட்டம் அப்போதைய அகண்ட இந்தியாவின், அதாவது ஆஃப்கனின் சில பகுதிகள், இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த சிப்பாய்களால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த `இந்திய எழுச்சி` தோல்வியை தழுவியதும், பகதூர் ஷா ஜாஃபர் ராஜ துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அப்போது பிரிட்டிஷ் அரசின் ஆளுகையில் இருந்த பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

பகதூர் ஷா ஜாஃபர் II
பகதூர் ஷா ஜாஃபர் II

 

பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகதூர் ஷா, நவம்பர் 7-ம் தேதி, தன்னுடைய 87-ம் வயதில் உயிரிழந்தார். ஆனால், அவர் எழுதிய கவிதைகள் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஜாஃபர் என்பது அவருடைய உண்மையான பெயர் அல்ல. அவருடைய புனை பெயர். அதன் பொருள் `வெற்றி`.

ஜாஃபர் அரியணை ஏறியது 1837-ம் ஆண்டு. ஆனால், 1700-ம் ஆண்டு காலக்கட்டத்திலேயே, முகலாய பேரரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களையும், தனது ஆதிக்கத்தையும் இழந்து இருந்தது.

ஜாஃபர் பொறுப்பேற்றபோது, அவரது ஆளுகையின் கீழ் டெல்லியும், அதன் சுற்றுவட்டார பகுதிகளும் மட்டும்தான் இருந்தன. இருந்தபோதிலும், அவர் பேரரசராக போற்றப்பட்டார்.

மற்ற முகலாய பேரரசர்களை போல, இவரும் மங்கோலிய அரசர்களான செங்கிஸ்கான் மற்றும் தைமூர் வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவரது இறப்பின் மூலமாக, உலகின் பெரிய வம்சாவளியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

பகதூர் ஷா இறந்த பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம், அவரது பிரேதத்தை அடையாளம் குறிக்கப்படாத ஒரு இடத்தில் புதைத்து. அதற்கு காரணம், அவரது மக்கள், அவரை கொண்டாட கூடாது என்பதும், அவர்களை அவரது நினைவுகளிலிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதும்தான்.

அவரது இறப்பு செய்தி இந்தியாவை வந்தடைய ஏறத்தாழ 15 நாட்கள் ஆனது. அவரது இறப்பு இங்கு பெரிதாக கண்டுகொள்ளப்படாமலே போனது.

நூறு ஆண்டுகளுக்குப் பின், அனைவரது நினைவுகளிலிருந்தும் ஜாஃபர் மெல்ல மறைந்தார்.

உயிர்த்தெழுந்த நினைவுகள்

ஆனால் அண்மைய தசாப்தத்தில், ஜாஃபர் குறித்த நினைவு மீண்டும் உயிர்த்தெழ தொடங்கி உள்ளது.

அதற்கு காரணம், ஒரு தொலைக்காட்சி தொடர்.

ஒரு தொலைக்காட்சி தொடர் 1980-ம் ஆண்டு ஒளிப்பரப்பானது. இந்த தொடர் அவர் குறித்த நினைவுகளுக்கு உயிர் கொடுத்தது. இந்த தொலைக்காட்சி தொடர் மட்டுமல்ல, டெல்லியிலும், கராச்சியிலும் உள்ள சாலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள அவரது பெயர், அவர் குறித்த நினைவுகளை மீட்டியது. டாக்காவிலும் ஒரு பூங்காவிற்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

`தி லாஸ்ட் எம்ப்பரர்` புத்தகத்தை எழுதிய வரலாற்றாசிரியர் வில்லியம் துல்ரிம்ப்பிள்,”ஜாஃபர் குறிப்பிடத்தக்க ஒரு மனிதர்” என்கிறார்.

மேலும் அவர் சொல்கிறார், “ஜாஃபர், ஒரு கையெழுத்துக் கலை நிபுணர், குறிப்பிடத்தகுந்த கவிஞர், சூஃபி ஞானி மற்றும் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை மதித்தவர். அதற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.”

“ஜாஃபரை ஒரு புரட்சிகரமான தலைவர் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவரது ஆட்சியும், அவரது முன்னோரான அக்பரின் ஆட்சி போலதான் இருந்தது. அவர் ஆட்சி, இஸ்லாமிய நாகரிகத்தின் ஒரு குறியீடு. அது அதிக சகிப்புத்தன்மை கொண்டதாகவும், பன்மைதுவத்தை அங்கீகரித்ததாகவும் இருந்தது” என்று தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார் வில்லியம்.

ஜாஃபரின் பெற்றோர்கூட, அவரின் சகிப்புத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம். அவர்கள் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். ஜாஃபரின் அப்பா அக்பர் ஷா II, ஒரு இஸ்லாமியர். அவரது அம்மா, லால் பாய், இந்து ராஜ்புட் இளவரசி.

ஜாஃபரின் சமாதி

யாங்கூனில் மரங்கள் நிறைந்த பகுதியில் எந்த பகட்டும் இல்லாமல் இருக்கும் ஜாஃபரின் கல்லறை, இந்திய வரலாற்றின் கொந்தளிப்பான காலத்தின் மெளன சாட்சி.

ஜாஃபரின் உடல், அவரது உறவினர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த, உள்ளூர் ராணுவ பாசறையின் உள்ளே எங்கோ ஓரிடத்தில் புதைக்கப்பட்டுள்ளது என்பது உள்ளூர் மக்களுக்கு தெரிந்து இருந்தாலும், அவர்களால் அது எந்த இடம் என்பதை 1991-ம் ஆண்டு வரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

மக்களின் மனங்களை வென்ற சூஃபி

ஒரு அரசராக ஜாஃபர் படைகளை வழிநடத்தியது இல்லை. ஆனால், இந்துகளையும் முஸ்லீம்களையும் இணைத்த ஒரு கலகத்திற்கு அவர் தலைமை தாங்கி இருக்கிறார்.

வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள், இந்து மற்றும் இஸ்லாம் என இரண்டு மதங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிப்பாய்கள், மீண்டும் முகலாய ஆட்சியை நிறுவுவதற்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக கலகம் செய்தனர்.

இந்த ஆண்டு (2017) அந்த இந்திய எழுச்சியின் 160-வது ஆண்டு. ஆனால், இந்த எழுச்சி இந்தியாவிலும் சரி, அப்போது இந்த எழுச்சியில் பங்கெடுத்த, பிரிட்டன் அளுகையின் கீழ் இருந்த ஆஃப்கன், பாகிஸ்தான், வங்கதேசத்திலும் சரி கொண்டாடப்படவில்லை.

தேசியவாதமும், அடிப்படைவாதமும் உச்சத்தில் இருக்கும் இந்த தருணத்தில், ஜாஃபரின் மதசகிப்புத்தன்மை இந்த காலத்துக்கு உகந்தது ஆகும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *