தொடர்கிறது மின்சார சபை ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம்…
இலங்கை மின்சார சபை ஊழியர்கள், மின்சார சபை தலைமையகத்தின் முன்னால் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் இன்று(14) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபை தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பில் கலந்துரையாட இன்று(14) விசேட கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சர் ரஞ்சிதி சியம்பலாபிட்டிய தலைமையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை நிர்வாக முகாமையாளருக்கு முறையற்ற விதத்தில் வேதன அதிகரிப்பு மற்றும் ஊழியர்களது மருத்துவ மற்றும் விசேட கொடுப்பனவு என்பனவற்றை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினரின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாவிட்டால், தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் கூட்டமைப்பு நேற்று(13) எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று(14) இடம்பெறவுள்ள கலந்துரையாடலில், குறித்த பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்கும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.