(மேல் மாகாணத்தில் கனிஷ்டப் பாடசாலைகள் பல மூடப்படும் அறிகுறி)
மேல் மாகாணத்திற்குட்பட்ட கனிஷ்ட பாடசாலைகள் பல, மூடப்படக்கூடிய அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, மேல் மாகாண கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறான பாடசாலைகளில் கட்டிட, மலசலகூட மற்றும் அடிப்படை வசதிகள் என்பன, போதியளவில் இல்லாமல் இருக்கும் நிலையில், மாணவர்களின் வருகையிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், மாகாணக் கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் இவ்வாறான பல பாடசாலைகள் ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ பிரதேசங்களில் மாத்திரம் ஆகக்கூடுதலான பாடசாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சில வகுப்புக்களுக்கு, போதியளவு மாணவர்கள் வருகை தராமையின் காரணமாக, கற்பிக்கும் ஆசிரியர்களில் பலர் வீணே காலத்தைக் கடத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இதேவேளை, வருடாவருடம் சராசரியாக 10 – 15 க்கு உட்பட்ட மாணவர்களே பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றார்கள். பாடசாலைகளில் வருடாந்தம் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கூட இடம்பெறுவதில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஆகவேதான், இவ்வாறான பாடசாலைகளை மூடிவிடுவது தொடர்பில், தற்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அவ் உயர் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-ஐ. ஏ. காதிர் கான்-