123 வருடங்கள் பழைமை வாய்ந்த நுவரெலியா பிரதான தபாலகக் கட்டடத்தை ஹோட்டல் நிர்மாணத்துக்காக இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தபால்துறை தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் நுவரெலியா பிரதேச மக்கள் ஒன்றிணைந்து கடந்த ஒன்பதாம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
நுவரெலியா தபாலகத்தைப் போலவே புராதன பெருமை வாய்ந்த கொழும்பு கோட்டை மற்றும் காலி தபாலகங்களையும் அரசு ஹோட்டல் நிர்மாணத்துக்காக வெளிநாட்டவர்களுக்குத் தாரைவார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கத் தலைவர் எஸ்.காரியவசம், மக்களின் இவ்வாறான தேசிய சொத்துகளை வெளிநாட்டு வியாபாரிகளுக்கு விற்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இது தொடர்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் இன்றும், எதிர்வரும் 26ஆம் திகதியும் கொழும்பில் நடத்தப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.
தபால் ஊழியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டம்
தபால் ஊழியர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட உள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
தபால் தொழிற்சங்க சம்மேளனம் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி அறிவித்துள்ளது.
இன்று நண்பகல் 12.00 மணியளவில் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை எதிரில் எதிர்ப்பு போராட்டமொன்றும் நடத்தப்பட உள்ளது.
நுவரெலியா, காலி மற்றும் கண்டி தபால் காரியாலயங்கள் சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்திக் கொள்ள எடுத்துள்ள திட்டத்தை எதிர்த்து இவ்வாறு போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தபால் ஊழியர்கள் எதிர்நோக்கி வரும் ஏனைய சில பிரச்சினைகள் தொடர்பிலும் இந்தப் போராட்டத்தின் போது எதிர்ப்பு வெளியிடப்பட உள்ளது.
இன்று நள்ளிரவு ஆரம்பமாகும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் எதிர்வரும் 14ம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.