முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு காலம் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்காமையின் காரணமாக நாம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளோம். எனவே அரசாங்கம் துரிதமாக இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக காலம் தாழ்த்தாது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனவாத தாக்குதல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
இனவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் பொலிஸார் அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்பாக வினவிய போதே அமைச்சர் Vi க்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்க முடியாது. அரசாங்கம் என்ற வகையில் நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அண்மை காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. பல வர்த்தக நிலையங்களும் தொழிற்சாலைகளும் பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டும் தீயிட்டு கொழுத்தப்பட்டும் உள்ளன.
எனவே இந்த விடயம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் பேசினோம். இதன்பிரகாரம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் பூரண நடவடிக்கை எடுக்கும் என்றும் இதற்கான பூரண அதிகாரத்தை பொலிஸூக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் எம்மிடம் குறிப்பிட்டார்.
எனினும் இந்த விடயம் காலம் கடந்தும் நடந்ததாக தெரியவில்லை. எனவே பொலிஸார் சட்டம் ஒழுங்கை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்கான பூரண அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
முஸ்லிம்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு காலம் கடந்தும் நடவடிக்கை எடுக்காதமையின் காரணமாக அரசாங்கத்தின் மீது நாம் நம்பிக்கை இழந்துள்ளோம். நாட்டில் வாழும் முஸ்லிம்களும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். ஆகவே அரசாங்கம் தொடர்ந்து காலம் தாழ்த்தாமல் இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.