• Sat. Oct 11th, 2025

மீண்டும் ஓர் அளுத்கம அனர்த்தம் ஏற்படாதிருப்பதற்கு…

Byadmin

Jun 15, 2017

தர்கா நகரை மையமாக வைத்து இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன் அளுத்கமயில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கலவரத்துக்கு இன்றுடன் மூன்றாண்டுகளாகின்றன.

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நேசத்துடன் வாழ்ந்துவரும் சிங்கள – முஸ்லிம் மக்களது உறவுக்கு கறுப்புப்புள்ளியிட்ட அளுத்கம கலவரம் கடந்த அரசு காலத்திலே இடம்பெற்றது.

இரண்டு முஸ்லிம்களது உயிர்களைப் பலியெடுத்து, பதினொரு பேரைக் காயத்துக்குள்ளாக்கி, பலகோடி பெறுமதிமிகு உடைமைகளைச் சேதப்படுத்திய அளுத்கம கலவரத்தைத் தூண்டியவர்கள் யார் என்பது இன்றும் வெளிவராத நிலையிலேயே இருக்கின்றது.

இன்று அக்கலவரத்தைத் தூண்டி விட பிரதான காரணியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று தலைமறைவாகி வாழும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

அளுத்கம கலவரம் போன்ற இன்னொரு கலவரம் இந்த நாட்டில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த நாட்டின் முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும்  சிங்கள மக்கள் 2015 ஜனவரி 8ஆம் திகதி இந்த அரசினை பதவிக்குக் கொண்டு வந்தார்கள்.

கடந்த அரசு காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக மட்டும் 480 சம்பவங்கள் நடைபெற்றன. இந்த அரசு காலத்தில் அப்படியான சம்பவங்கள் இடம்பெற மாட்டாதென எதிர்பார்த்தாலும் இந்த அரசின் இருவருட காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த இரு மாதங்களுக்குள் மட்டும் 40 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
ஒரு சிறிய தொகையினரே இவ்வாறான சம்பவங்களைச் செது வருகின்றனர். சிறு குழுக்கள் செய்தாலும் சட்டமும் நீதியும் அமுல்படுத்தப்படாததினால் நாளுக்கு நாள் அவர்களது கை ஓங்கிவரும் நிலையே காணப்படுகின்றது.

இந்தச் சம்பவங்கள் நடப்பதற்கு இடமளிப்பதனால் நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கட்டி எழுப்பப்பட்ட சிங்கள, முஸ்லிம் ஒற்றுமை கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.

அளுத்கம சம்பவத்தினால் கால்களை இழந்த இரு முஸ்லிம் வாலிபர்கள் இந்த துயரச் சம்பவத்தின் அடையாளமாக இருக்கின்றார்கள்.

இரு இளைஞர்களும் இன்றும் ஊனமுற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தரமான ஒரு செயற்கைக் காலைக் கூட வாங்கிக் கொடுப்பதற்கு அரசோ, சமூகமோ நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

சமூகத்தின் உடனடிக் கவனம் இந்த விடயத்தில் செலுத்தப்படுவது அவசியமாகும்.

இதேநேரம் அளுத்கம போன்ற வெறுக்கத்தக்க கலவரங்கள் இந்த நாட்டில் ஏற்படாதிருப்பதனை உறுதி செவதே இன்றுள்ள முக்கிய தேவையாகும்.
இதற்கான சுற்றாடல் கட்டமைப்புக்களை உருவாக்குவதில் அரசுக்கு பாரிய பொறுப்புள்ளது.

(நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)
Aadhil Ali Sabry
JOURNALIST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *