முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நாட்டில் தற்போது அரங்கேற்றப்பட்டு வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை வைத்து, உலமா சபை உட்பட முஸ்லிம் சிவில் அமைப்புகள் மக்களை அமைதியாக இருங்கள் என்று கூறிக் கொண்டிருக்கக் கூடாது.
முஸ்லிம் சிவில் அமைப்புகள் தனித்து களத்தில் இறங்கி அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்படுகின்றமை, பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை தொடர்பிலான சமூகத்தின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத செயல்களை தூண்டிவிடும் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரை பாதுகாப்பு பிரிவினரால் இதுவரை தேடிக் கண்டுபிடிக்க முடியாமற் போயுள்ளது. நீதிமன்றுக்கு ஆஜராகாது பொய்க்காரணங்கள் கூறப்பட்டுள்ளன. சுகயீனமாக இருப்பதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இறையாண்மை உள்ள அரசாங்கமாக காணப்படவில்லை.
தற்போதைய அரசாங்கம் இனவாதம் சம்பந்தமான எந்தக் குற்றங்களுக்கும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் காலத்திலும் இந் நிலைமை நிரூபிக்கப்பட்டது.
இந்நிலையில் முஸ்லிம் சிவில் அமைப்புகள் அரசாங்கத்தை பிரநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைக்காது அவர்கள் கூறுவது போன்று தொடர்ந்து பொறுமை காக்காது தனித்து களத்தில் இறங்க வேண்டும்.
தொடர்ந்தும் பொறுமை காக்க முடியாது. பொறுமை இழந்தால் நடக்கும் சம்பவங்களை எவராலும் கட்டுப்படுத்த முடியாமற் போகும். இவ்வாறான அசம்பாவித நிலைமை ஏற்பட்டால் அறிக்கை விடுபவர்களும் அமைதியாக இருக்கும்படி கூறுபவர்களுமே அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
வரலாற்றினை நோக்கினால் தமிழர்களின் போராட்டமும் இவ்வாறே உருவானது. முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் சர்வதேச பின்னணி உள்ளது என பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்.
இவ்வாறான கருத்துகள் தெரிவிப்பது அமைச்சர் சம்பிக்க ரணவக்க. இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக அமையும். எனவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தீரயோசித்து கருத்துகளை வெளியிட வேண்டும் என்றார்.
-ARA.Fareel –