(வரலாறு தவற விட்ட பக்கங்கள்)
சீனா இன்றைய உலகின் வளர்ந்து வரும் மிகப் பெரும் வல்லரசு. ஏழை, எளிய நாடுகளை தனது பொருளாதார பிடிக்குள்
கொண்டு வருகின்ற பணக்கார ஜாம்பவான். ரோட்& பெல்ட் திட்டம் (Road and Belt initiative)மூலமாக வளர்முக நாடுகளுக்கு கடன் கொடுத்து, மீள முடியா கடன் சுமைகளுக்குள் மூழ்கடித்து, அப்படியே அந்த நாடுகளின் கடல், கரை, ஆகாய மார்க்கங்களை ஒன்றும் விடாமல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்ற ஒரு வட்டிக் கடைக்காரன்.
சீனாவின் ஆக்கிரமிப்பு மென்டாலிடி அதனோடிணைந்த வெளி நாட்டு வணிகம் சார் யுக்திகள் மிக்க கனதியானவை அதுபோல ஆதியானவை. வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே நெடுகிலும் இருந்து வருகிற பட்டுப் பாதை (Silk Road) இதற்கான நல்லதோர் எடுத்துக் காட்டு. சீனாவின் கடல் வணிகமும், நாடு -காண் கடற் பயணங்களும் கூட மிகவும் பிரசித்தம் வாய்ந்தவை. இது பற்றிய குறிப்புகள் சோழர் காலத்து இலக்கிய புனைவுகளிலும் விரவி இருக்கின்ற அளவுக்கு தொல்லியமானவை.
சீனா மட்டுமல்ல உலகில் தோன்றிய எல்லா வல்லரசுகளுமே கடல் ஆதிக்கத்தின், கடல் வணிகத்தின் ஏகபோக உரிமையை தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்காக தான் போட்டி போட்டு இருக்கின்றன. போட்டி போட்டும் சண்டை பிடித்தும் வருகின்றன. தற்கால இன்ஸ்டன்ட் இனவாதிகள் கவலைப்படுவது போல வர்த்கத்திற்கான போட்டி இன்று நேற்று தொடங்கிய ஒன்று கிடையாது. அது மிக மிகப் பழமையானது. இந்தப் போட்டியின் ஆரம்பமாய் இருந்தவைகள் தான் இந்த நாடு காண் கடற்பயணங்களும், திரை கடலோடித் திரவியம் தேடலும். மார்க்கோ போலோ, கிறிஸ்தோபர் கொலம்பஸ், இப்னு பதூதா போன்ற உலகப் புகழ் பெற்ற மாலுமிகளின் கடற் பயணங்கள் கூட இதன் ஒரு பகுதி தான்.
1371 ஆம் ஆண்டு தென்மேற்கு சீனாவின் யுன்யான் மாகாணத்திலே உள்ள குன்யாங் கிராமத்தில் ஷெங் ஹி (Zheng He) பிறக்கின்றான். நம்மைப் போலவே அவனும் அந்த நாட்டு சிறுபான்மை இனத்து குழந்தை. வளரும் பயிரை முளையிலே அறியாலாம் என்பதற்கொப்ப மிகவும் துடிப்பான, தைரியமான, புத்தி கூர்மையான ஒரு பையனாக, இளைஞனாக வளர்ந்து வருகிறான் ஷெங் ஹி. அன்றைய காலத்தில் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள், கால்பந்து போட்டிகள், ரக்பி போட்டிகள் எதுவும் இல்லாத காரணத்தினால் தங்களது நாட்டின் வல்லமையை பலத்தைக் காட்டுவதற்காக வேண்டி நேரம் கிடைக்கும் போதெல்லாம் யுத்தம் புரிவது தான் அன்றைய அரசுகளின் வழக்கமாக இருந்தது. நாடுகளைப் பிடிப்பது, சிறைக்கைதிளை அடிமைகளாக கொண்டு செல்வது, சாம்ராஜ்ய எல்லைகளை விரிவு படுத்துவது, இவைதான் அன்றைய நாட்களில் இருந்த மிகப்பெரும் என்டர்டெயின்மென்ட்.
வல்லாதிக்க போட்டியின் ஒரு பகுதியாய் ஷெங் ஹி பிறந்து வளர்ந்த மண் மங்கோலியப் பேரரசின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மிங் பேரரசினால் (Ming dynasty) கைப்பற்றப்படுகின்றது. இவைகள் பற்றி எதுவும் அறியா அப்பாவியான ஷெங் ஹி உட்பட்ட பொதுமக்கள் எல்லோரும் சிறைக்கைதியாய் பிடித்துச் செல்லப்படுகிறார்கள். எனினும் ஷெங் ஹி யின் தைரியத்தையும் புத்திக் கூர்மையையும் அவதானித்த படைத் தளபதிகள் அவனை மிங் பேரரசின் இளவரசனான யங் லீ இன் சேவகனாக பணிக்கு அமர்த்துகிறார்கள். அப்போது ஷெங் ஹி இன் வயது வெறும் 11.
இளவரசனான யங் லீ மிகத் திறமையான ஒரு வாலிபன். போர்க்குணமும், தூர நோக்கு சிந்தனையும் உள்ள ஒரு அஞ்சா நெஞ்சன், அரசியல் வித்தகன். இனி இவன்தான் மிங் பேரரசின் பெயர் சொல்லும் எதிர் கால அரசன். இப்படித்தான் அரச குடும்பத்திலும் மக்கள் மத்தியிலும் யங் லீ அறியப்படுகிறவனாகிறான். யங் லீ யின் செல்வாக்கும் புகழும் கட்டற்ற காட்டு வெள்ளமாக நாடு முழுவதும் பரவுகிறது. இது அவனைச் சுற்றியுள்ள மற்றைய இளவரசர்களுக்கு பெரும் தலையிடியாய் மாறிவிடுகிறது. இனி என்ன வழமையான “ராஜ தந்திரம்” செய்ய வேண்டியது தானே! அதே! அதே! அரச குடும்பம் என்றால் கூட இருந்து குழி பறிப்பதும் கொலை செய்வதும் சாதாரணமாய் நடப்பது தானே! இளவரசனைச் சுற்றி பின்னப்படுகின்ற இந்த சூழ்ச்சி வலையை மோப்பம் பிடித்து, கொலைச் சதி முயற்சியை மிக இலாவகமாக தனது உயிரை பணயம் வைத்து முறியடிக்கிறான் ரீன்ஏஜ் வயதிலிருந்த இளஞ் சிங்கம் ஷெங் ஹி. இதனால் இளவரசனின் மிக்க நம்பிக்கையான உதவியாளராக, ஓவர் நைட்டில் ஒபாமாவாகவே மாறிவிடுகிறான். யுத்தக் கைதியாய், அடிமையாய் வந்து சேர்ந்த ஷெங் ஹி படிப்படியாக முன்னேறி மிங் பேரரசின் கடற்படையின் அட்மிரலாக பதவி உயர்வு கொள்கிறான்.
யங் லீ தான் சீனப்பெருஞ்சுவரை மீளவும் முற்றாக கட்டி முடித்த பேரரசன். மிங் வம்ச சாம்ராஜ்ய கனவுகளை நனவுகளாக்கிய செயல் வீரன். தனது நாட்டின் எல்லைகளை விரித்து இந்த உலகையே ஆள வேண்டும் என்ற வேட்கை, வானம் தொடும் கடல் எல்லைக்கு அப்பாலும் தனது ஆட்சி எல்லை விரிவடைய வேண்டும் என்ற ஆசை யங் லீயய் தூங்க விடாமல் துரத்தித் கொண்டே இருந்தது. பேரரசனின் ஆசைக்கும் முயற்சிக்கும் உறுதுணையாய் நின்று செயல் வடிவம் கொடுத்தவன் தான் ஆஜானுபாகுவான உடலும், உயர்ந்த தோற்றமும் கொண்ட நம்ம ஆள் அட்மிரல் ஷெங் ஹி. கர்ச்சிக்கின்ற குரலும், காந்தப் பார்வையும், வேங்கை நடையும், அச்சேமே இல்லாத நெஞ்சுரமும் தான் அட்மிரல் ஷெங் ஹி இன் பண்புகளாய் சீன வரலாற்று ஏடுகளிலும் குறிப்பிடப்படுகிறது.
யங் லீயின் சாம்ராஜ்ய கனவுகளை நனவாக்குவதற்கான வேண்டி ஷெங் ஹி யின் கூட்டம் நாடுகாண் பயணம் செல்ல தயாராகிறது. கடல் மீது வற்றாத காதலும், தீராத வேட்கையும் கொண்ட ஷெங் ஹி யின் தலைமையில் கப்பல் தயாராகிறது. இது தான் அன்றைய கால டைடானிக். நாமறிந்த கொலம்பஸ் இன் சென் மேரியா (St Maria) கப்பலை விடவும் இந்தக் கப்பல் நான்கு மடங்கு பெரியது. அன்றைய நாட்களில் உலகிலே இருந்த இந்த மிகப் பெரும் கப்பல்களின் துணையோடு 1405 ஆம் ஆண்டு ஷெங் ஹி மிகப்பெரும் கடற்பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். உலகில் இதுவரை அப்படி ஒரு பயணமே மேற்கொள்ளப்படவில்லை எனுமளவுக்கு மிகப் பிரமாண்டமான கடற் பயணம் அது. மொத்தமாக 62 மிகப்பெரும் கப்பல்கள். அவற்றுள் சில கப்பல்கள் 600 அடி நீளமானவை.
அது தவிர பல நூற்றுக்கணக்கான சின்னசின்ன துணைக்கப்பல்கள். அவை முழுக்க கடற்பயணத்திற்கு தேவையான சாமான்கள் மற்றும் ஏனைய நாட்டு அரசர்களுக்கு கொடுக்க வேண்டிய விலையுயர் அன்பளிப்புப் பொருட்கள். வரலாற்றுப் பெறுமதி மிக்க இந்த கடற்பயணத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் தொகை 26 ஆயிரம். எல்லோருமே ஆண்கள்! (பெண்நிலை வாதிகள் பொறுத்தருள்க!) எல்லோருமே ஷெங் ஹி இனால் தேர்ந்தெடுக்கப்பட்ட (cherry picked) மாலுமிகள், கப்பலோட்டிகள், பயண வழிகாட்டிகள், மற்றும் கடற் பயண குறிப்பெழுதுனர்கள். அது தவிரவும் பல நூறு வைத்தியர்கள், சமையல்காரர்கள், பௌத்த, இஸ்லாமிய மதத்தலைவர்கள். போய்ச் சேரும் நாடு முஸ்லிம்களின் ஆட்சியில் என்றால் முஸ்லிம் மதத் தலைவர்களை முன்னிருத்தி பேச்சு வார்த்தை நடத்துவது அது போல அது பௌத்த நாடு என்றால் பௌத்த குருக்களை முன்னிருத்தி பேச்சு வார்த்தை நடத்துவது. எப்படி ஒரு பிளானிங்! எப்படி ஒரு சமயோசிதம்!. இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இன்னுமொரு திட்டமும் வகுப்பட்டிருந்தது! இந்தப் பயணத்தில் எங்காவது சாப்பிட முடியாத உணவு உள்ள தீவுகளை போய்ச் சேர்ந்தால், பாலைவன பூமியில் தங்கினால், கடற் பயணம் சிக்கலாகினால், கொண்டு போன உணவுகள் தீர்ந்த்து போனால் என்ன செய்வது? இதற்கெல்லாம் விடையாக சில நூறு கப்பல்கள் முழுக்க விவசாய நிலங்கள். அதிலே அதற்கே உரிய தானியங்களும், மரக்கறிகளும் , அதற்கான நீர் வசதிகளும். அப்படி ஒரு பக்கா பிளானிங். அது தானே அட்மிரல் ஷாங் ஹி இன் தலைமைத்துவ முன் மாதிரி.
வரலாறு பேசுகின்ற இந்த கடற் பயணத்திலே முதலிலேயே அடைகிற இடம் சம்பா துறைமுகம். இது இன்றைய வியட்நாமின் ஒரு பகுதி. துறைமுகத்தை அடைந்த ஷெங் ஹி க்கு மிகப்பெரிய ஆச்சரியம். சப்பை மூக்கையும், இடுங்கிய கண்களையும், குள்ள உயரத்தையும் கொண்ட சீனர்கள் இங்கேயுமா! புளகாங்கிதம் அடைகிறார். நம்மைப் போன்ற சீனர்கள் வேறு இடங்களிலும் இருக்கிறார்கள் என்ற செய்தியை உடனே இன்ஸ்டாகிராம் செய்கிறார். செய்தி சீனாவுக்கும் போய் சேர்கிறது. நிறைய அன்பளிப்புகள் பரிமாற்றத்துடன் ராஜதந்திர உறவுகள் வியட்னாமுடன் ஏற்படுத்தப்படுகிறது. அரசு மரியாதைகளுடன் பிரியாவிடை பெற்று கரையோரமாய் மலாக்காவை வந்தடைந்து அங்கேயும் இராச்சிய உறவுகளை வலுப்படுத்தி விட்டு அப்படியே அங்கு இருந்து புறப்படும் போது பெரும் பேரிடர் ஒன்று அவர்களை எதிர் கொள்கிறது. ஓ வென வீசும் பெரும்புயல், சோ வென பொழியும் பெரு மழை எல்லாமே சேர்ந்து கப்பல்களை எல்லாம் புரட்டிப் போடுகிறது. கடற்பயணங்களில் மலை போல் வரும் அலைகளையும், பனி போல வெற்றி கொண்ட அட்மிரல் அல்லவா அவர்! தனது அனுபவங்களையெல்லாம் திரட்டி லாவகமாய் கப்பல்களை முன்னகர்த்தி கல்கத்தா துறைமுகத்தில் பாதுகாப்பாய் கொண்டுபோய் நிறுத்துகிறார் ஷெங். இனி என்ன கப்பல் முழுக்க கொண்டாட்டமும், ஷெங் ஹி யின் வீரதீரம் குறித்த கதைகளும் தான். சீனாவுக்கு திரும்பிச் சென்றதும் இந்த கதைகள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைகின்றன. இன்று வரை பேசப்படும் கதைகளாகவும் இருந்து வருகின்றன.
இந்த கடற் பயணத்தில் பெற்ற பாடத்தை பயன்படுத்தி திரும்பி வரும் வழியில் மலாக்கா நீரிணையில் மிகப் பெரும் கப்பல் தங்குமிடம் ஒன்றும் அமைக்கப்படுகிறது. இதுதான் பிற்காலத்தில் ஷெங் ஹி யின் ஏழு கடற்பயணங்களுக்குமான தங்குமிடமாகவும் பாவிக்க படுகிறது. இந்த அளவுக்கு இதன் கட்டுமானத்திலேயே தூரநோக்கும் உறுதியும் நிறைந்து இருந்திருக்கிறது. எதிர்கால கடற்பயணத்தை பாதுகாப்பாய் செய்வதற்காய் வேண்டி சுற்றி வர இருந்த கடற் கொள்ளையர்களோடெல்லாம் சண்டை செய்து அவர்களெல்லாம் வெற்றி கொண்டு கைது செய்து சீனாவுக்கே கொண்டு சென்று அரசனின் முன் சிரச்சேதமும் செய்து விடுகிறார் ஹி. இதனால் இந்து சமுத்திரம் கடற் பயணங்களுக்கு பாதுகாப்பானதாக மாறி விடுகின்றது. கடல் கொள்ளையர்களை வெற்றி கொண்ட செய்தி சீன ராஜ்யம் முழுக்க வீர தீர செயல்கள் கதைகளாய் பரவுகிறது. ஷெங் ஹி கடவுளின் ஒரு வரமாகவே கொண்டாடப்படுகிறார். ஆனால் ஷெங் ஹி யோ தனக்கு உதவியது இறைவன் காட்டிய ஒளி தான் என்று பணிவு கொள்கிறார். தனது கடற்பயணங்களில் அங்கு கண்டவைகளையும் தான் ஏற்படுத்திக் கொண்ட புதிய ராஜ்ய உறவுகள் பற்றியும் விவரிக்கிறார். தனது ராஜ விசுவாசத்தை மன்னனுக்கு வெளிப்படுத்துகிறார். இது கேட்டு அளவிலா ஆனந்தமடைந்த மன்னன் இன்னுமொரு கடற் பயணத்துக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். அதிலே இலங்கைகும் வந்து போகிறார். இலங்கையில் யானைக்கும் பசுவுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றியும் ,புத்த மதத்தின் செல்வாக்கு பற்றியும் , முத்துக் குளிப்பது பற்றியும் அவரது குறிப்புகள் பெரிதும் எடுத்துரைக்கின்றன. வருகின்ற அதே வழியில் இலங்கையிலிருந்தும் விலை மதிக்க முடியாத மாணிக்கக் கற்களை பெற்றுக்கொண்டதாகவும் நிக்கோபார் தீவுகளுக்கும் சென்றதாகவும் அவருடைய குறிப்புகள் தொடர்ந்து செல்கின்றன.
அடுத்தடுத்து பல கடற்பயணங்கள். இப்படி நான்கு பெரும் பயணங்கள் நடந்து முடிகிறது. தனது ஐந்தாவது பயணம் தனது ஐம் பெரும் கடமைகளுள் ஐந்தாவது கடமையை நிறைவு செய்வதாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஹி. சிறு பருவத்தில் தனது பெற்றோரிடம் இருந்து கேட்ட கதைகளால் ஆகர்ஷிக்கப்பட்ட ஷெங் ஹி இந்தப் பயணத்தில் தனது கனவுகளையும் சேர்த்து நனவாக்க நாட்டம் கொள்கிறார். அதுதான் தனது மார்க்கத்தின் இறுதிக் கடமையான ஹஜ் பயணத்தை மேற்கொள்வதும் , நபிகளாரின் அடகஸ்தலத்தை தரிசிப்பதும். இதற்கான அரச அனுமதியும் அடுத்த நொடியே கிடைக்கிறது. சீனாவிலிருந்து அரேபியாவுக்காவான இராஜதந்திர உறவை ஏற்படுத்துகின்ற ஒன்றாகவும் இதே பயணம் திட்டமிடப்படுகிறது. மக்காவிலே ஹஜ்ஜை முடித்துவிட்டு, நபிகள் பெருமானாரின் அடக்கஸ்தலத்தையும் மதீனாவுக்குச் சென்று தரிசித்து விட்டு வருகிற வழியில் அப்படியே அங்கிருந்து ஆபிரிக்கா மற்றும் சோமாலியாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். அங்கிருந்து வரும் போது ஷெங் ஹி நிறைய மருத்துவ மூலிகைகளையும், பல்வகை வாசனை திரவியங்களையும், புது வகை உணவுப் பண்டங்களையும், விலை மதிக்க முடியாத மாணிக்கக்களையும், இரத்தினங்களையும், காண்டாமிருகத்தின் கொம்புகளையும், யானையின் தந்தங்களையும் மன்னனுக்குரிய அன்பளிப்பாக எடுத்து வருகிறார்! இன்னும் இன்னும் மன்னனையும் மக்களையும் ஆச்சரியமூட்டும் வகையான சாமான்களை, சீனர்கள் யாருமே தங்கள் வாழ்நாளில் இதுவரை கண்டிராத பலவகைப் பொருட்களையும் தன்னோடு கூடவே எடுத்து வருகிறார்.
மிருகங்களையும் கொண்டு வருகிறார். இந்தப் பிரயாணத்தில் சிலாகிக்க படவேண்டிய ஒன்று தான் சோமாலியாவிலிருந்து அரசனுக்காக எடுத்து வந்த ஒட்டகச்சிவிங்கி, வரிக் குதிரை,காட்டு மான் மற்றும் தீக் கோழி. இவைகள் எல்லாம் நேரடியாகவே கடவுளிடம் இருந்து பெறப்பட்டதாக அவர்கள் நம்பினார்கள். தங்களது மன்னருக்கு ஷெங் ஹி கடவுளிடமிருந்து பெற்று வந்த வரமாகவே இவைகள் எல்லாம் கொண்டாடப்பட்டது. இது கடவுள் தங்கள் மிங் சாம்ராஜ்யத்தை ஆசீர்வதித்ததற்கான ஒரு அடையாளமாக பார்க்கப்பட்டது. இவ்வளவையும் தனது நாட்டிற்கு கொண்டு வந்த ஷெங் ஹி யை மன்னனும், மத்திய அமைச்சர்களும் துறைமுகம் சென்று நேரடியாக வரவேற்றதாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
நல்ல விஷயங்கள் நடப்பது சிலருக்கு எப்போதுமே பிடிப்பதில்லை இதுபோலத்தான் அரச சபையிலே இருந்த சில மந்திரிகளுக்கு ஹி யின் இந்த அடைவுகளும் முன்னேற்றமும் பிடிக்கவில்லை. ஹி யினுட இந்த கடற்பயணங்கள் எல்லாம் வெறும் வீண் செலவாக அவர்கள் கருதினார்கள். இதனால் நாட்டின் சொத்துக்கள் வீணடிக்கப்படுவதாக அரசனிடம் புகார் செய்கிறார்கள்.
எனினும் அரசன் அவர்களோடு உடன்படவில்லை. தொடர்ந்தும் ஹி யின் பயணங்களுக்கு உறுதுணையாய் இருந்தார். இதனால் கோபமுற்ற மந்திரிகள் எல்லோரும் சேர்ந்து இரகசியமாய் திட்டமொன்று திட்டினார்கள். அதன் படி
ஷெங் ஹி யின் நாடுகாண் பயணங்கள் பற்றி எழுதி வைத்திருந்த கோப்புகளை எல்லாம் ரகசியமாக திருடி அழித்து விடுகிறார்கள்.
கயவர்கள் எப்பொழுதும் முட்டாள்கள் தான் என்பதை இங்கேயும் நிரூபித்திருக்கிறார்கள். ஹி கஷ்டப்பட்டு தேடி வைத்த வரலாற்று பொக்கிஷங்கள் யாவும் எதிர்கால சந்ததியின் கைக்கு கிடைக்காமல் அழிந்துவிடுகிறது. வரலாறு அதன் நல்ல சில பக்கங்களை இழந்திருக்கிறது.என்றாலும் ஷெங் ஹி எழுதிய கல்வெட்டுகளும் , குறிப்புத் தூண்களும் இன்று வரை அவருடைய பயண வரலாற்றில் எச்சங்களாய் எஞ்சியிருக்கின்றன. தன் உயிரை பணயம் வைத்து தேடியே அரும்பொருட்கள் எல்லாம் அழிந்து விட்டதை எண்ணி மனம் உடைந்த ஷெங் ஹி படுத்த படுக்கையாய் அப்படியே நோய்வாய்படுகிறார். இதனால் இவரது கடற்பயணங்களும் முற்றாக தடைப்படுகின்றது.
இந்த சைக்கிள் கேப்பிலே தான் போர்த்துக்கேயர் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் கால்பதிக்கின்றனர். இல்லையென்றால் இவைகள் எல்லாம் சீனாவினுடைய ஒரு காலனியாக அன்றே மாறி இருக்கும் என்பதுதான் நிறைய வரலாற்றாசிரியர்களின் கருத்தாக இருக்கிறது. வரலாறு எப்போதுமே இடைவெளிகளை விட்டு வைப்பதில்லை. ஷெங் ஹி இன் இடைவெளியை அது போர்த்துக்கேயரினை கொண்டு நிரப்பி விடுகிறது.
ஷெங் தனது 28 வருட கடற்பயணங்களில் 50 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமான பிரயாணங்களை செய்திருக்கிறார். 30 நாடுகளுக்குச் சென்று இருக்கிறார். இப்படி நாடு நாடாக அலைந்து திரிந்த ஷெங் ஹி இன் உயிரும் உடலும் 1435 ஆம் ஆண்டு ஒன்றை விட்டு மற்றொன்று நிரந்தரமாகவே பிரிந்து விடுகிறது. உடல் நன்சிங் பிராந்தியத்தில் உள்ள நிஷோவு மலை உச்சியிலே புதைக்கப்படுகிறது. சீனாவின் மிகப் பெரும் மாலுமியை எதிர் காலத்தில் நாமெல்லாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக 1985 ஆம் ஆண்டு அவரது 580 ஆம் ஆண்டு சிறப்பு நாள் கடற்பயண நினைவாக ஷெங் ஹி இன் அடகஸ்தலம் புதுப்பிக்கப்படுகிறது.
அதிலே அவரது கடைசி விருப்பத்திற்கேற்றவாறு இஸ்லாமிய முறைப்படி அந்தக் கல்லறை அமைக்கப்படுகிறது. அதுபோலவே மிங் சாம்ராஜ்யத்தின் கட்டடக்கலையை ஒத்ததாகவும் புனர் நிர்மாணம் செய்யப்படுகிறது. கல்லறையை சுற்றி நான்கு திசைகளிலும் 28 படிகளைக் கொண்ட ஏழு தட்டுகள் அமைக்கப்படுகின்றன. இவை அவரது ஏழு பயணங்களையும் ஞாபகப்படுத்துவதாக இருக்கின்றது. கல்லறையின் உச்சியில் இறைவன் பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்ற வசனம் வாழ்வின் யதார்த்தத்தை விளக்குவதாய் பொறிக்கப்பட்டிருக்கிறது.
கல்லறைக்கு பக்கத்திலேயே ஷெங் ஹி கடற்பயணம் மேற் கொண்ட மூன்று கப்பல்கள் அப்படியே இன்றும் எஞ்சியிருப்பது ஷெங் ஹி க்கு இன்னும் இன்னும் பெருமை சேர்ப்பதாக அமைகிறது.
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவ நிபுணர்
ஆதார வைத்தியசாலை சம்மாந்துறை/ நிந்தவூர்