(கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெயாங்கொடைக்கு புதிய ரயில் பாதை)
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மினுவாங்கொடை
ஊடாக வெயாங்கொடை வரை புதிய ரயில் பாதையொன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை பிரதேச செயலகத்தில், (02) திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் இங்கு மேலும் பேசும்போது,
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்ப் பயணிகள் கொழும்புக்குப் பயணிக்காமல், ரயிலிலேயே மினுவாங்கொடை, வெயாங்கொடை ஊடாக கண்டி, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குப் பயணிக்க முடியும்.
குறித்த புதிய ரயில் பாதை அமைப்பதற்கான வாய்ப்பு தொடர்பில், ரயில் திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியன இணைந்து, ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது. இதன் பின்னணியில், கட்டுநாயக்க – வெயாங்கொடை புதிய ரயில் பாதை, மிக விரைவில் அமைக்கப்படும் என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )