ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து ‘முழு நாடும் சரியான பாதையில்’என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய கொள்கையினை எதிர்வரும் வாரம் வெளியிடவுள்ளன.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணி,லங்கா சமசமாஜ கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,ஸ்ரீலங்கா கம்யூனிச கட்சி,தேசிய சுதந்திர முன்னணி,தேசிய காங்கிரஸ்,பிவிதுறு ஹெல உறுமய,ஸ்ரீ லங்கா மஹாஜன கட்சி,விஜய தரணி தேசிய சபை,ஐக்கிய மஹஜன கட்சி உட்பட 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து ‘ முழு நாடும் சரியான பாதையில்’என்ற தொனிப்பொருளில் தேசிய கொள்கையினை எதிர்வரும் வாரம் 2 ஆம் திகதி புதன்கிழமை வெளியிடவுள்ளது.
பங்காளி கட்சிகளின் இந்த கொள்கை வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 2ஆம் திகதி மாலை 3 மணியளவில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை,மொனாக் இம்பிரியல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
திறந்த பொருளாதார கொள்கையினால் ஏற்பட்டுள்ள விளைவுகளில் இருந்து குறுகிய மற்றும் நீண்ட கால கொள்கை அடிப்படையில் மீள்வதற்கான வழிமுறைகள்,சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலைமை உள்ளிட்ட பல்வேறு பொதுகாரணிகளை அடிப்படையாகக் கொண்டு பங்காளி கட்சிகள் தேசிய கொள்கை திட்டத்தை வெளியிடவுள்ளனர்.
பங்காளி கட்சிகளின் இந்த தேசிய கொள்கை திட்ட வெளியீட்டு நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்துக்கொள்ள போவதில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி தலைவர்களான வாசுதேவ நாணயக்கார,விமல் வீரவன்ச மற்றும் உதயகம்மன்பிலவிற்கும் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் 11 பங்காளி கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
கூட்டணியில் ஒரு கட்சியை முன்னிலைப்படுத்தி ஏனைய கட்சிகள் செயற்பட வேண்டும் என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக பங்காளி கட்சிகளின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.