இலங்கைக்கு தொழில்நுட்ப பொறியியல் உதவிகளை வழங்க ஈரான் தயாராகவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் பதவியேற்பு நிகழ்வு தெஹ்ரானில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கலந்துகொண்டிருந்தார். இதன்போது இருவருக்குமிடையில் அரசமட்ட பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் எப்போதும் நட்புரீதியான தொடர்புகள் இருந்து வந்துள்ளன. வர்த்தக, கலாசார ரீதியான தொடர்புகளும் இரு நாடுகளுக்குமிடையில் வலுபெற்றுள்ளது. இந்த நேரத்தில் இரு நாடுகளுக்கிடையிலான தொடர்பை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாகும். இதற்கென ஈரான், தொழில்நுட்ப பொறியியல் உதவிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளோம்.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஈரானுக்கு வருகைதந்துள்ளமை அரசியல் ரீதியான வலுப்படுத்தலுக்கு முக்கியமானதாக இருக்குமென நம்புகின்றோம். அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கி செல்ல நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்கான தயார்படுத்தல்களை இரு நாடுகளுமே மேற்கொள்ள் வேண்டும் என ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கையில் வாழும் மக்கள் ஈரானிய தேசத்தின்மீது பெரும் மதிப்பு வைத்துள்ளனர். ஆரம்ப காலம் முதலே இலங்கைக்கு: நட்பு ரீதியான அனைத்து உதவிகளையும் ஈரான் வழங்கி வருகின்றது. ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் பதவியேற்பு நிகழ்வில் எம்மையும் அழைத்து மிகவும் சிறப்பாக எம்மை வரவேற்றமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்களுக்கு ஈரானின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என நினைக்கின்றேன். சிறந்த தொழில்நுட்ப அபிவிருத்தி மார்க்கங்களை இனங்கண்டு தொடர்ந்தும் இரு நாடுகளும் வலுவான தொடர்புளை பேணும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.