புதிய அரசியல் அமைப்பின் மூலமாக மத்திய அரசாங்கத்தை பலவீனப்படுத்தி தமிழ் பிரிவினைவாதிகளின் தேவையை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தமிழீழத்தை உருவாக்கும் அடித்தளத்தை ஜனாதிபதியும், பிரதமரும் இட்டுள்ளதுடன் சர்வதேசத்திற்கான வாக்குறுதிகள் மெதுவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பொது எதிரணி உறுப்பினருமான விமல் வீரவன்ச எம்.பி.தெரிவித்தார்.
புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. சர்வதேச தரப்பே
வடக்கை ஆளப்போகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக கூறி அரசியல் அமைப்பு சபையின் ஊடாக புதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கை கொண்டுவரப்பட்ட போதிலும் இந்த அரசியல் அமைப்பு இந்த நாட்டினை பிரிக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு சாதகமான ஒன்றாகவே அமைந்துள்ளது. இதனை மூடிமறைத்து மக்களை ஏமாற்றும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றமேயே உண்மையாகும்.
மிக நீண்ட காலமாக இந்த நாட்டில் தமிழ் பிரிவினைவாத சக்திகள் தமது இலக்கினை அடைந்துகொள்ள அரசியல் அமைப்பு மூலம் வாய்ப்பை பயன்படுத்த முயற்சித்தன. 13 ஆம் திருத்தத்தை கொண்டுவந்த போதும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் பொய்களை கூறியே அதனை நிறைவேற்றியது. மக்கள் கருத்தை நிராகரித்து நீதிமன்றத்தின் கருத்தை கொண்டு நிறைவேற்றிக் கொண்டனர். இன்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் புதிய அரசியல் அமைப்பை மக்கள் வாக்கெடுப்பு இல்லாது தமது அதிகாரத்தை மாத்திரம் கொண்டு நிறைவேற்ற பார்க்கின்றது.
புதிய அரசியல் அமைப்பு திருத்தத்தையும் கூட மோசமான வகையில் தான் நிறைவேற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. சமஷ்டி என்ற அடிப்படையில் கொண்டுவரவே அரசாங்கம் முயற்சிகின்றது. பொலிஸ் , காணி, நிதி முகாமைத்துவம் அனைத்தும் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டு மத்திய அரசாங்கத்தை பெயரளவில் செயற்படுத்தவே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. ஒரு புறம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்து அவர்களின் வலியுறுத்தல்களின் பிரகாரம் இலங்கையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறுகின்றார், காணமால் ஆக்கப்பட்டோர் குறித்து சர்வதேச சமவாயத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறுகின்றார்.
மறுபுறம் இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டத்தையும், ஜனநாயகத்தையும் புறக்கணித்து புலம்பெயர் அமைப்புகள், சர்வதேச சக்திகளுக்கும் வடக்கு பிரிவினைவாதிகளுக்கும் ஏற்ற வகையில் அரசியல் அமைப்பை உருவாக்கி செல்கின்றனர். ஆகவே இந்த அரசியல் அமைப்பு பிரிவினைவாத சக்திகளின் ஒரே தேவைக்காக மாத்திரமே முன்னெடுக்கபட்டு வருகின்றது.
ஒன்பது துண்டுகளாக நாடு பிரிக்கப்பட்ட பின்னர் இந்த நாடு எவ்வாறு ஐக்கியப்படும். வடக்கு கிழக்கில் ஒரு சட்டமும் ஏனைய பகுதியில் வேறு விதமாகவும் செயட்படுத்தவா எமது இராணுவத்தின் 27 ஆயிரம் உயிர்கள் பலிகொடுக்கப்பட்டது. மக்கள் இப்போதும் அமைதி காத்து இந்த அரசியல் அமைப்பிற்கு இடம் கொடுத்தால் நாடு பிளவுபடும். தனித்து தனி இராச்சியம் ஒன்றை உருவாக்கவே தமிழ் பிரிவினை வாதிகள் முயற்சித்து வருகின்றனர். அதன் பின்னர் யுத்தகுற்றம் வலியுறுத்தப்படும். இது நிரூபிக்கப்பட்டால் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் தமிழீழம் உருவாக்கப்படும்.
காணமால் போனோரை கண்டறிய நீதிமன்றம் உருவாக்கப்படும், இந்த தலையீடுகள் மூலமாக இறுதியில் தமிழ் ஈழம் உருவாக்கப்படும். இதனை உருவாக்குவதால் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படம்போவதில்லை. சர்வதேச தரப்பே வடக்கை ஆளப்போகின்றது. ஆகவே இந்த நாட்டினை பிரிவினைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து மக்களும் இணைந்து போராட வேண்டும்.
தமிழ் பிரிவினைவாதிகளுக்கு ஏற்ற வகையில் இந்த நாட்டினை இரத்த வெள்ளத்தில் மீண்டும் மூழ்கடிக்கச் செய்யும் இந்த செயற்பாடுகளை தடுக்க வேண்டும். நாட்டை சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுக்கும் துரோக அரசியல் அமைப்பை நிறைவேற்ற இடமளிக்கக் கூடாது. இரத்தம் சிந்தி தக்க வைத்த ஒற்றையாட்சி நாட்டை அழிக்கவே இவர்கள் முயற்சித்து வருகின்றனர். மத்திய அரசாங்கத்தை பலவீனப்படுத்தி நாட்டை துண்டாட இடமளிக்கவே முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.