பாகிஸ்தானின் பெண் ஊடகவியலாளர் ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தவர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உத்தியோகத்தர் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் அறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரபூர்வமாக இதனை அறிவித்துள்ளது.
பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த நபர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அதிகாரியோ அல்லது பணியாளரே கிடையாது என தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றுள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளரே இவ்வாறு, பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
இந்த பாலியல் தொந்தரவு தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு அதிகாரபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.
இந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்திய போது, பாலியல் தொந்தரவு செய்தவர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டைச் சேர்ந்தவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
முனசா ஜிலானி என்ற பெண் ஊடகவியலாளருக்கு வட்ஸ்அப் மூலம் குறித்த இலங்கையர் பாலியல் ரீதியாக தொந்தரவு தரும் தகவல்களை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜிலானி தனது டுவிட்டர் பதிவில், இந்த விடயங்கள் குறித்த விபரங்களை பதிவிட்டிருந்தார்.