• Sat. Oct 11th, 2025

மாகாணங்களை பலவந்தமாக ஒன்றிணைக்க முடியாது – பிரதமர்

Byadmin

Nov 2, 2017 ,

மாகாணங்களை பலவந்தமாக ஒன்றிணைக்க முடியாது – பிரதமர்

மாகாணங்களை பலவந்தமாக பாராளுமன்றத்தால் ஒன்றிணைக்க முடியாது. இரு மாகாணங்களை ஒன்றிணைப்பதோ மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ நாட்டு மக்கள் அனைவரும் இணங்கினால் மட்டுமே சாத்தியமாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் அரசியலமைப்பு சபையில் நேற்று (01) நடைபெற்றது. இந்த விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

மாகாணங்கள் ஒன்றிணைக்கப்படக் கூடாது. மாகாணங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு இருத்தலும் கூடாது என்று வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி யோசனை முன்வைத்திருப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர்:

நாட்டில் தற்போது 9 மாகாணங்கள் உள்ளனன. முழு நாட்டினதும் இணக்கமின்றி அதை பத்தாக அதிகரிக்கவோ அல்லது எட்டாக குறைக்கவோ முடியாது. நாட்டிலுள்ள சகல மக்களும் இணங்கினால் எம்மால் அதனை பதினைந்தாகவும் சரிஅல்லது மூன்றாகவும் மாற்றியமைக்க முடியும். மக்கள் இணக்கம் தெரிவித்தால் நாம் அதை செய்ய முடியும்.

மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையோ குறைப்பதையோ மக்களே முடிவு செய்ய முடியும். அதனை பாராளுமன்றத்தினால் பலவந்தமாக செய்ய முடியாது. வடக்கு,கிழக்கு மாகாணங்களையோ அல்லது சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களையோ ஒன்றிணைக்க எம்மால் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபை முறை ஒற்றையாட்சிக்கு குந்தகமாக அமையக்கூடாது எனவும், ஒன்றிணைந்த எதிரணியின் யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதனை நாமும் ஏற்கிறோம்.மாகாண சபைகள் மத்திய அரசு மற்றும் நிறைவேற்று அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே தமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற அவர்களின் யோசனையையும் தாம் ஏற்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *