• Sat. Oct 11th, 2025

முஜீபுர் ரஹ்மானின் ஆதங்கம்!

Byadmin

Nov 4, 2017
கொழும்பு மாவட்ட மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யபட்ட, பாராளுமன்றப் பிரதிநிதியாகிய தான், பொதுபல சேனாவுடன் முஸ்லிம் தரப்பு மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையை குழப்பப் போவதில்லை எனவும், எனினும் இந்தப் பேச்சு குறித்து இலங்கை முஸ்லிம்களுக்கு பகிரங்கப்படுத்துவது அவசியமென பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது முஸ்லிம் அமைப்புக்கள் என்னை நாடுகின்றன. பிரதமர் ரணிலிடம் பேசுவதற்கு அனுமதி பெற்றுத்தரும்படி என்னிடம் வருகின்றனர். கொழும்பில் 90 சதவீதமான முஸ்லிம்களின் வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். மக்களின் பிரதிநிதியாகிய எனக்கு பொதுபல சேனாவுடன் நடைபெறும் பேச்சு பற்றி யாரும் அறிவிக்கவில்லை.
சிங்கள ஊடகவியலாளர் மூலமே இதை அறிந்துகொண்டேன். இதற்காக நான் கவலைப்படுகிறேன். எனக்கு அறிவிக்கவில்லை என்பதற்காகவோ அல்லது நானும் பேச்சில் பங்கு கொள்ளவில்லை என்பதற்காகவோ பொதுபல சேனா – முஸ்லிம் தரப்பு பேச்சை நான் குழப்பப் போவதுமில்லை. அந்த கீழ்த்தர புத்தியும் என்னிடமில்லை.
மக்கள் பிரதிநிதியாகிய என்னிடம் தொடர்புகொள்ளும் மக்கள், பொதுபல சேனாவுடனான இப்பேச்சு குறித்து கேட்கிறார்கள். எனது பங்களிப்பு பற்றி வினா எழுப்புகிறார்கள்.
எனவே பொதுபல சேனாவுடன் தாம் என்ன பேசுகிறோம் என்பதை முஸ்லிம் தரப்பு பகிங்கப்படுத்த வேண்டும். முஸ்லிம் பொதுமக்களிடம் இந்தப் பேச்சு குறித்த நிலவும் சந்தேகங்கள் அப்போதூன் நீக்கப்படும்.
முஸ்லிம்களின் நலன்கருதி பொதுபல சேனாவுடன் பேச்சில் ஈடுபடுவதாக கூறுவோர், பேச்சு பற்றி விபரத்தை ஏன் பகிரங்கப்படுத்த தயங்குகிறார்கள் என புரியவில்லை. இந்த புரிதலின்மையால் முஸ்லிம் சமூகம் குழப்பி நிற்கிறது. கொழும்பு மக்களின் பிரதிநிதி என்ற வகையிலும், இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவன் என்றவகையிலும் பொதுபல சேனாவுடன் முஸ்லிம் தரப:பு மேற்கொண்ட பேச்சின் அத்தனை விடயங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டுமென நான் விரும்புகிறேன்.
மக்களின் பிரதிநிதி என்ற வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதுவிடயத்தில் உள்ள தார்மீக பொறுப்பை புரிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன் பொதுபல சேனாவும், ஞானசாராவும் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்கள் கொஞ்சமல்ல. நானும் பலதடவை பொலிஸ் தலைமையகத்திலம், நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளேன். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்துள்ளேன். இப்படியிருக்கையில் ஞானசாரரிடமிருந்து எந்த உத்தரவாதமும் பெறாமல் நாம் தப்பிக்கவைக்க முடியாது எனவும் முஜீபுர் ரஹ்மான் மேலும் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

-மொஹமட் அன்ஸிர்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *