• Sun. Oct 12th, 2025

ஹசனல் பன்னா, செய்யது குதுப், ராஷித் அல்கன்னூஷி

Byadmin

Mar 5, 2018

(ஹசனல் பன்னா, செய்யது குதுப், ராஷித் அல்கன்னூஷி)

நவீன இஸ்லாமிய எழுச்சியில் இமாம் ஹசனல் பன்னாவின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. குறுகிய காலத்துக்குள் அவர் ஏற்படுத்திய அதிர்வு அலாதியானது. மயங்கிக் கிடந்த சமூகத்தை உசுப்பி எழுப்பினார். பெருந்தொகை கொண்ட மாணவர் குழுவொன்றை மிகக் கவனமாக உருவாக்கி விட்டார். இமாம் பன்னா தனது மார்க்க, அரசியல், பொருளாதார, இயக்க கட்டமைப்பு என அனைத்து சிந்தனைகளையும் ‘ரஸாஇல்’ இல் சுருக்கமாகவும் தெளிவாகவும் முன்வைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அவரது பைஅத்துக்கான 10 அர்கான்களில் முதல் பகுதியான ‘பஹ்ம்’ -ஆழமான புரிதல்- எனும் தலைப்பில் முன்வைத்த 20 அடிப்படைகள் குறிப்பாக இஹ்வான்கள் மத்தியில் கூடிய கவனத்தை பெற்றன. ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி தனது ‘துஸ்தூருல் வஹ்தா அஸ்ஸகாபிய்யா’ புத்தகத்தில் முன்வைக்கும் விளக்கம் மிகவும் அழகானது. கர்ழாவி ஏழெட்டு அடிப்படைகளை விளக்கி தனிப்புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

மறுபுறம் இமாம் பன்னாவின் சிந்தனைகளால் தாக்கமுற்று இஸ்லாமிய வேலைத்திட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட செய்யது குதுப் காலப்போக்கில் மவ்தூதியின் சிந்தனையால் தாக்கமுறுகிறார். இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாட்டை அரசியலுடன் தொடர்புபடுத்தினார். செய்யது குதுபுடைய சிந்தனை இமாம் பன்னாவுடைய சிந்தனையுடன் சிறிதளவிலே வித்தியாசப்படுவதாக முஹம்ம்து குதுப் குறிப்பிடுவார். அல்லாஹ்வுடைய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கட்டாயமானது என்பதை பன்னா தனது ஐந்தாவது மாநாட்டில் விளக்கியிருக்கிறார். அதனை செய்யது குதுப் ஒருசில வித்தியாசங்களுடன் வடிவமைத்திருக்கிறார் என்பார். இருவரது சிந்தனையும் முதன்மைப்படுத்தலில்தான் வித்தியாசம் பெறுகின்றன என இன்னும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பன்னா இயக்க கட்டமைப்பு மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய பகுதிகளில் கூடிய கவனம் செலுத்த செய்யது குதுப் அரசியலையும் இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாட்டையும் தொடர்புபடுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார் என்பர். செய்யது குதுப் ஆட்சி, ஆட்சியாளர் தொடர்பை ஈமான், குப்ரோடு தொடர்புபடுத்தினார். சமூகத்தை இஸ்லாமிய சமூகம், ஜாஹிலிய்ய சமூகம் எனப் பிரித்தார். இஸ்லாமிய கோட்பாடுகள், பெறுமானங்கள், பண்பாடுகள், நடத்தைகள், சட்டங்கள் நடைமுறையாகும் சமூகத்தை இஸ்லாமிய சமூகம் என விளக்கினார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையிலில்லாத சமூகத்தை ஜாஹிலிய்ய சமூகம் என்றார்.

முஹம்ம்து குதுப் போன்றவர்கள் பன்னா, குதுப் ஆகிய இருவரது சிந்தனையும் முதன்மைப்படுத்தலிலே வித்தியாசம் பெறுகின்றன என வாதாடும் அதேநேரம் எகிப்தின் சட்டவல்லுனர் தாரிக் அல்பிஸ்ரி வேறு கோணத்தில் அணுகினார். பின்வருமாறு கூறினார்: செய்யது குதுப் ஒரு சிந்தனையாளர். ஹசனல் பன்னாவின் சிந்தனைகளை விட முற்றிலும் வித்தியாசமான சிந்தனையையே அவர் முன்வைத்தார். பன்னாவின் சிந்தனை அனைவரையும் ஒன்றிணைக்கக் கூடியது. பொதுமக்களை அது அரவணைத்துச் செல்கிறது. மெதுமெதுவாக கட்டியெழுப்பக் கூடியது. ஆனால் செய்யது குதுபின் சிந்தனையோ ஒதுங்கிச் செல்லும் சிந்தனை. பிரிந்து செல்லக்கூடியது. பன்னாவின் சிந்தனை விதை நட்டு, அதனை தளிராக்கி, மரமாக்கி நீண்டு அகன்று வளர வாய்ப்பளிக்கக் கூடியது. செய்யது குதுபின் சிந்தனையோ நிலத்தின் கீழால் சுரங்கம் அமைத்து அதற்குள்ளால் பெரும் அணைகள் கொண்டு மறைக்கப்பட்ட மாளிகை போன்றது…
இறுதியில் இஹ்வான்கள் மத்தியில் ஒன்றுக்கொன்று முரணான இரு வித்தியாசப்பட்ட சிந்தனைகள் பரவின. இக்கட்டத்தை முஹ்தார் ஷன்கீதி மிக அழகாக விளக்குவார். 70, 80 காலப்பிரிவுகளில் எகிப்திய இஹ்வான்கள் செய்யது குதுபின் அரசியல் சிந்தனையை பின்பற்றி ஆட்சியதிகாரம் கொண்டவர்களுடன் மோதி, அவர்களை விட்டும் முழுமையாக ஒதுங்கியதாகவும் குறிப்பிடுவார். சூடானிய இஹ்வான்கள் பன்னாவின் அரசியல் சிந்தனையை பின்பற்றி நமீரி போன்றவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்ததாகவும் ஆட்சியதிகாரங்களோடு மிகக் கவனமான நகர்வை மேற்கொண்டதாகவும் விளக்குகிறார். ஹஸன் துராபி போன்றவர்களது சிந்தனைப்பங்களிப்பும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அவர்களது வியூகங்களும் இமாம் பன்னாவின் நெகிழ்வுத்தன்மையிலிருந்து பெற்றதுதான். சுடானிய இஸ்லாமிய இயக்கத்தின் போக்கு பல நன்மைகளை பெற்றுக் கொடுத்தது. கட்டம் கட்டமான வளர்ச்சி, அரசியல் அனுபவம், முதிர்ச்சி, பொருளாதார ஸ்தீரத்தன்மை, நிர்வாகக் கட்டமைப்பில் அனுபவ்ம், பாதுகாப்புப் படையில் அங்கீகாரம், அங்கத்துவம் கிடைத்தல்… என இன்னும் பல நன்மைகளையும் அதனால் ஈட்டிக் கொள்ள முடியுமாக இருந்தது.

இப்பின்னணியில் ராஷித் அல்கன்னூஷி துராபியின் நீட்சியாக உருவெடுக்கிறார். பன்னாவின் நெகிழ்வுப்போக்கு, அனைவரையும் உள்வாங்கும் போக்கு என அவரது சிந்தனைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார். அரச அதிகாரத்தை விட்டும் ஒதுங்கி, அதனுடன் போராட்டமொன்றை உருவாக்கும் செய்யது குதுபுடைய சிந்தனை நீண்ட நெடுங்காலமாக இஸ்லாமிய உலகில் ஆதிக்கம் செலுத்தியிருப்பினும் ஹஸன் துராபியும் அவரைத்தொடர்ந்து ராஷித் அல்ஹன்னூஷியும் இமாம் பன்னாவின் சிந்தனைக்கு மீண்டும் உயிர் கொடுத்தனர். அது இன்று தனக்கான இருப்பை மெதுமெதுவாக பெற்றுவருகின்றது என்பதை மறுக்க முடியாது.

கன்னூஷி இமாம் பன்னாவின் சிந்தனையை இரு தளங்களுக்கு நகர்த்துகிறார். ‘தஃவா’ துறையை ஒரு தளத்துக்கும் ‘அரசியல்’ துறையை இன்னொரு தளத்துக்கும் ஆக்குகிறார். கலைகள் பல உருவாகி ஒவ்வொரு கலையும் அதற்கென்று நிபுனர்களை உருவாக்கிக் கொள்ளும் காலமிது. துறைசார்ந்தவர்களை வரவேற்கும் ஓர் உலகில்தான் நாம் வாழ்கிறோம். இந்நடைமுறை யதார்த்தத்தை கன்னூஷி தஃவாவிலும் அரசியலிலும் பிரயோகிக்கிறார். இரண்டின் இயங்கு தளத்தையும் பிரித்து விடுகிறார். கன்னூஷி தலைமை தாங்கும் நஹ்ழா கட்சி ஓர் அரசியல் கட்சி. அது ஏனைய அரசியல் கட்சிகளோடு கைகோர்த்து மக்கள் நலனை முதன்மைப்படுத்துகிறது. மதச்சார்பின்மை வாதிகளோடு கைகோர்த்து அரசியல் அடக்குமுறைக்கு பதிலாக மக்கள் தேர்வையும் சட்டவாட்சியையும் கொண்டு வர அவர் பாடுபடுகிறார். நாட்டு மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த உழைக்கிறார். கருத்துச் சுதந்திரம், மத சுதந்திரத்துக்கு பாடுபட்டிருக்கிறார். கன்னூஷியின் இவ்வணுகுமுறை செய்யது குதுபுடைய அரசியல் சிந்தனைக்கு முற்றிலும் வித்தியாசமானது. அரசியல் ஆய்வாளர் ஹலீம் ரானே கன்னூஷியுன் அரசியல் போக்கை ‘மகாஸித் அணுகுமுறை’ என்கிறார். ஷரீஆவின் அடிப்படை இலக்குகளாக நவீன கால அறிஞர்களால் முன்வக்கப்படும் மதசுதந்திரம், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், சூழல் பாதுகாப்பு, நீதி, அபிவிருத்தி… போன்ற அடிப்படை பகுதிகளில் கன்னூஷி கூடிய கவனத்தை குவித்திருக்கிறார். மறுபுறம் வெளிநாட்டுக் கொள்கையிலும் வித்தியாசமான போக்கை கைக்கொண்டு வருகிறார். மேற்கு, கிழக்கு நாடுகளுடன் அவர் ஏற்படுத்தி வரும் நல்லுறவு இஸ்லாமிய அரசியல் சிந்தனையின் புதியதொரு அத்தியாயம். பன்னாவின் அரசியல் சிந்தனையின் வளர்ச்சிக் கட்டமது. இஸ்லாமிய இயக்கங்கள் கிட்டிய எதிர்காலத்தில் கன்னூஷியின் போக்கை பின்பற்ற முற்படலாம் எனலாம். அரசியலையும் தஃவாவையும் பிரத்யேகமான இரு தளங்களுக்கு நகர்த்துவதுடன் தேசத்தை கட்டியெழுப்புவதில் சிந்தனை முரண்பாடு கொண்ட ஏனைய சக்திகளோடு கைகோர்க்கும் அணுகுமுறையையும் அவை பின்பற்ற வாய்ப்பிருக்கிறது.

-நன்றி அல்ஹசனாத்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *