(தொப்பி அணிந்து வாதாடுவதை நீதிபதி தடுத்தபோது, தொழிலை தூக்கி எறிந்த சட்டத்தரணி அப்துல் காதர்)
1905ம் ஆண்டு மே மாதம் 02ம் நாள் சட்டத்தரணி எம் சீ அப்துல் காதர் அவர்கள் துருக்கித் தொப்பி அணிந்து கொண்டு நீதியரசர் லாய்ட் முன்னிலையில் ஒரு வழக்கில் ஆஜரானார்.
அப்போது அவர் அவ்வாறு அந்த வழக்கில் வாதாடுவதை எதிர்த்த நீதியரசர் லாயட் நீதிமன்றுக்கு மரியாதை செலுத்தும் முகமாக அவர் அணிந்திருந்த துருக்கித் தொப்பியை அல்லது காலணியை கழற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார் .
அப்போது தொப்பி அணிந்து வாதாடுவது தான் நீதிமன்றுக்கு செய்யும் இஸ்லாமிய மரியாதை எனவும் அதனை கழற்ற முடியாது என மறுத்து சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள் நீதி மன்றத்தை விட்டு வெளியேறினார்.
அவரது துணிகரமான இச்செயல் மூலம் தனது தொழிலை விடவும் சமூக உரிமை காப்பதின் கடமைப்பாட்டை உணர்த்தியதோடு விளிப்பற்றிருந்த சமூகத்தினை செயலாற்றவும் செய்தது.
இவ்விடயமானது அன்றைய சோனக சங்கத் தலைவரான ஐ எல் எம் அப்துல் அஸீஸ் அவர்களை எட்டியபோது அவர்கள் அன்றைய முஸ்லிம் முக்கிய தலைவர்களை அழைத்து மரபுரிமையின் முக்கியத்துவத்தினை உணர்த்தினார் .
இது இவ்வாறு இருக்கும்போது நீதியரசர் லாயட்டின் விடாப்பிடியான வலியுறுத்தலின் பேறாக 1905ம் ஆண்டு செப்டம்பர் 19ம் திகதி துருக்கித் தொப்பி அணிந்து வாதாடுவது தடுக்கப்பட்டதாக சட்டமாக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக 1905ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் அறிஞர் அஸீஸ் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் கூடி தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமையை சட்டமாக்குவதற்காக வேண்டிப் போராடும் விதமாக துருக்கித் தொப்பி போராட்டக் குழு என்ற பெயரில் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்.
சமூக ஒற்றுமையினாலும் முஸ்லிம் தலைமைகளின் துணிகரமான சமூகப்பற்றுள்ள முடிவுகளாலும் வெற்றி பெற்று முஸ்லிம் சட்டத்தரணிகள் நீதி மன்றத்தில் தொப்பி அணிந்து கொண்டு வழக்கில் வாதாட முடியும் என்ற சட்டம் ஆங்கிலேய அரசினால் சட்டமாக்கப்பட்டு இயற்றப்பட்டது.