• Sat. Oct 11th, 2025

தியாகத் திருநாளை ரோஹிங்யா முஸ்லிங்களுக்காக அர்ப்பணிப்போம்-கிழக்கு முதலமைச்சர்

Byadmin

Sep 2, 2017

நாம் குடும்பம் சகிதம்  தியாகத் திருநாளாம்  ஹஜ் பெருநாளை கொண்டாடிவரும் இன்றைய தினத்தில்  மியன்மாரில்  கொடூரத் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் எமது சகோதர முஸ்லிங்களுக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திக்க வேண்டும்,

இப்ராஹிம் நபி அவர்கள் அல்லாஹ்வுக்காக செய்த தியாகத்தை நினைவு கூறும் இந்நாளில் நாம் எமது   சகோதர முஸ்லிங்களுக்காக எமது சிறிதளவு நேரத்தை தியாகம்  செய்து அவர்களுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம்,

மியன்மாரில் தினந்தோறும் பச்சிளங்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படும் புகைப்படங்களையும் காட்சிகளையும் பார்க்கின்ற போது அவை எங்களை நிலைகுலையச் செய்கின்றன.

எம் சமூகத்திற்கு எதிராக அடக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் விளைவிக்கப்படுகின்ற போது முஸ்லிங்கள் ஒன்றிணைய முன்வர வேண்டும்,

எம்மிடையே உள்ள கொள்கை ,கட்சி  வேறுபாடுகளை மறந்து  ரோஹிங்யா முஸ்லிங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மிலேச்சத்தனமான  வன்முறைகளுக்கு எதிராய் குரல் கொடுக்கவும்  நம் சமூகத்தின் மீதான வன்முறைகளின் போது ஒன்றிணைந்து  செயற்படவும்  தியாகத் திருநாளாம் இந்த நன்நாளில்  நாம் உறுதி பூணூவோம்,

 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து  ரோஹிங்யா முஸ்லிங்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கு மியன்மாருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்துக்கு  அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்.

அத்துடன் மனிதாபிமானத்தை மையப்படுத்தி சிறுபான்மையினரால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கமும் பகிரங்கமாக மியன்மாரின் நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டும்,

எனவே இன்றைய தினம் தியாகத் திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிங்களுக்கும் இனிய ஹஜ்  பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்

மாகாண முதலமைச்சர்

ஹாபிஸ் நசீர் அஹமட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *